மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகின்றது.
மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.
ஜோதிராதித்ய சிந்தியாவும் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து நேற்று ஆலோசனை நடத்திய நிலையில் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நேற்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை ஜோதிராதித்ய சிந்தியா அனுப்பி வைத்தார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியும் சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அறிக்கை வெளியிட்டது.
இதனால் ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை இழந்து ஆட்சிக்கு சிக்கலில் உள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் திக்விஜய் சிங் கூறுகையில், அதிருப்தியில் உள்ள 22 சட்டமன்ற உறுப்பினர்களில் 13 பேர் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக மாட்டோம் சென்று தெரிவித்ததாக கூறினார். மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.