காலாவதியான மாத்திரைகளை 13 வயது சிறுமிக்கு மருத்துவர்கள் வழங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வடபொன்பரப்பி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு இம்மாவட்டத்தை சுற்றி இருக்கும் 15-க்கும் மேலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் சளி மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்களுக்காகவும் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசோதனை செய்வதற்காக வந்து செல்கின்றனர். இதில் அவர்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்த 13 வயது சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர் காய்ச்சலுக்காக மாத்திரைகளை அளித்துள்ளார். ஆனால் அந்த மாத்திரையை சிறுமி வாங்கி பார்த்த போது ஒரு மாத்திரை காலாவதியானது தெரியவந்துள்ளது.
இதனைப் பார்த்த சிறுமி மற்றும் மற்ற நோயாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது பற்றி மருத்துவமனைக்கு வந்த நோயாளிகள் கூறும் போது எங்களை போன்ற கிராமப்புற பொதுமக்கள் தனியார் மருத்துவமனைக்கு போக போதிய வசதி இல்லாத காரணத்தினால் அரசு மருத்துவமனைக்கு வருகிறோம் என கூறியுள்ளனர். ஆனால் அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் பொறுப்பில்லாமல் சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு காலாவதியான மருந்து, மாத்திரைகளை வழங்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அதை வாங்கி சென்று உண்ணும் அவர்களுக்கு பல உபாதைகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் காலாவதியான மருந்துகளை தருகின்ற ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.