மெக்சிகோ எல்லையில் உள்ள 14 அடி சுவரிலிருந்து இரண்டு குழந்தைகள் அமெரிக்காவிற்குள் வீசப்படும் காட்சிகள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்ஸிகோவின் எல்லையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நள்ளிரவு கடும் இருட்டில் சுமார் 14 அடி உயரம் கொண்ட இரண்டு குழந்தைகள் அமெரிக்காவில் வீசப்படும் பகீர் வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் எல்லையை கேமரா மூலமாக கண்காணிக்கும் அலுவலகத்தில் இருந்த நபர் இந்த காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அவர் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு முதலுதவி செய்துள்ளனர். அதன்பின்பு குழந்தைகளுக்கு வேறு ஏதும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்று அறிய மருத்துவமனையை நாடியுள்ளனர்.
மேலும் இந்த 2 குழந்தைகளும் 3 மற்றும் 5 வயதுடையவர்கள். ஈக்வடார் நாட்டை சேர்ந்த சிறுமிகளான இவர்களை அமெரிக்காவின் எல்லையில் வீசிவிட்டு கடத்தியவர்கள் இருவரும் தப்பி ஓடும் காட்சிகள் அந்த வீடியோவில் வெளியாகியுள்ளது. தற்போது குழந்தைகளுக்கு அதிகாரிகள் சிற்றுண்டி வழங்கும் புகைப்படங்கள் வெளியானது திருப்தியளிக்கிறது.
அதாவது அமெரிக்க எல்லை காட்சிகளை கண்காணித்து வந்த அந்த நபர் அந்த குழந்தைகளை கவனிக்க தவறியிருந்தால் அவர்களின் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும். எனினும் இச்சிறுமிகளின் பெற்றோர் எதற்காக இவர்களை கவனிக்காமல் தனியாக விட்டார்கள் என்பது தெரியவில்லை. மேலும் வீடியோ காட்சிகளைக்கொண்டு கடத்தல்காரர்களை தேடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.