கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ஆரோக்கியமேரி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஆரோக்கியமேரியின் கணவர் அற்புதராஜ் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 22 வயதுடைய மகளும், 14 வயதுடைய மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஈரோடு அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த பிறகு மாத்திரைகளை வாங்கிக்கொண்டு ஆரோக்கிய மேரி வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆரோக்கிய மேரியை மேல் சிகிச்சைக்காக பெருந்துறையில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் ஆரோக்கிய மேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர் ஐந்து மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. ஏற்கனவே அவர் ஓரிரு முறை கருக்கலைப்பு செய்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனாலும் ஆரோக்கியமேரி இறந்ததற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை. பிரேத பரிசோதனை அறிக்கை பிறகு தான் அவர் எப்படி இருந்தார்? என்பது குறித்து தெரியவரும் இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் ஆரோக்கிய மேரியுடன் பழகிய நபர் யார்? என்பது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.