அமெரிக்காவில் 2 டால்பின்கள் சுட்டுக்கொன்ற குற்றவாளிகள் குறித்து தகவல் அளித்தால், அவர்களுக்கு 14 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த மாதம் 30-ஆம் தேதி நேபிள்ஸ் கடற்கரையிலும் அதே வாரத்தில் எமரால்டு கடற்கரையிலும் 2 டால்பின் இறந்து அதன் உடல்கள் கரை ஒதுங்கின. இறந்து போன 2 டால்பின்களின் உடலிலும் துப்பாக்கியால் சுடப்பட்டும், கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதற்காக தடயங்கள் இருந்தன என்று தேசிய பெருங்கடல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற இரக்கமற்ற கொடூர செயலில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதேபோல அங்குள்ள மக்களும் அவர்களை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் டால்பின்களை கொன்ற குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 14 லட்சம் வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.