144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுகுறு தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்குமா என்ற நிலைமை மோசமடைந்துள்ளது.
ஊரடங்கு காரணமாக பணியாளர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் சங்கத்தினர் கூறி இருக்கின்றனர். தொழில் முனைவோர்களின் இந்த கருத்தால் தமிழ்நாட்டிலுள்ள பல லட்சம் ஆலைத் தொழிலாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். மார்ச் 25-ஆம் தேதி தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால்,
பல தொழிற்சாலைகளில் மார்ச் மாத சம்பளத்தை பணியாளர்களுக்கு 50 முதல் 70 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதி பணம் வாடிக்கையாளர்களிடம் பெற்று பின்னர் வழங்கப்படும் என்று ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.மார்ச் மாத சம்பளத்தை தனியார் பைனான்ஸ் மூலம் திரட்டி வழங்கியதாக சிலர் கூறியுள்ளனர். தற்போதைய நிலையில் இருந்த மீண்டு வர ஒரு வருடம் ஆகும் என்பதால்,
ஏப்ரல் மாதத்திற்கான சம்பளம் தர முடியாத சூழல் ஏற்படலாம் என்று தொழில் முனைவோர்கள் கூறுகின்றனர். வங்கி கடனுக்கான தவணைக் தொகை தள்ளிவைப்பு வெறும் மூன்று மாதங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு ஆலைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தவறும் பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் தொழில் முனைவோர்கள் கூறியிருக்கின்றனர்.