தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்துவது குறித்து அனைத்து துறை செயலாளர்களுடன் தலைமை செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலாக உள்ள நிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 144 தடை தடை காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவுரை வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்றுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எவ்வித இடையூறும் இருக்காது என நேற்று முதல்வர் கூறியுள்ள நிலையில், அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாக உள்ளது. பால், காய்கறிகள், தண்ணீர் போன்றவை பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மட்டும் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 14 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது. இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலாக உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகளை காவல் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர்.