கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் விளாத்திகுளம் சுற்று வட்டார நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர்.
எட்டையபுரம் தாலுகாவில் நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, ஆடுபுலி ஆட்டம் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று இவர்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை திருவிழா சீசன் என்பதால் அந்த காலகட்டத்தில் இவர்கள் பிசியாக இருப்பது வழக்கம்.
ஆனால் கொரோனா தடை உத்தரவின் காரணமாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்தானதால், வருமானமின்றி தவிப்பதாக நாட்டுப்புற கலைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மற்றவர்களை மகிழ்விப்பதற்காக தன்னையும், தன் உடலையும் வருத்திக் கொண்டு மக்களை மகிழ்வித்த நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால் அதனை களைய உடனடி நடவடிக்கை தேவை என்பது அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.