149 ஆண்டுகளுக்கு பிறகு குறு பூர்ணிமா தினத்தன்று நடைபெற்ற சந்திரகிரகணத்தை பார்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
விண்வெளியில் பூமியின் நிழலானது 13 லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்கு கூம்பு வடிவில் பரவிக்கிடக்கிறது. கருநிழல் பகுதி என்று அழைக்கப்படும் அப்பகுதியில் பௌர்ணமி நாள் அன்று சந்திரன் கடந்து செல்லும் போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. பூமியின் நிழலில் குறிப்பிட்ட அளவு மட்டுமே சந்திரன் மறைப்பதால் பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த பகுதி சந்திரகிரகணம் நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நிகழ்ந்தது.
இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று அறிவியலாளர்கள் கூறி இருந்ததால், இதை காண பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். இந்தியாவில் நள்ளிரவு 12.13 மணிக்கு தொடங்கிய பகுதி சந்திர கிரகணமானது இரவு 1.30மணிக்கு முழுமை அடைந்தது. பின் அதிகாலை 4.30 மணிக்கு நிறைவு பெற்ற சந்திரகிரகணம் மேக மூட்டத்தின் காரணமாக சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் தெளிவாக தெரியவில்லை. இருப்பினும் கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் தொலைநோக்கி மூலம் பொதுமக்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேபோல உத்தர பிரதேச மாநிலம் கான்பூர், மஹாராஷ்ட்ரா , மும்பை , டெல்லி உள்ளிட்ட நகரங்களில் பகுதி சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்களால் பார்க்க முடிந்தது. சில நகரங்களில் சந்திரகிரகணம் சிகப்பு நிறத்தில் காட்சியளித்தது. 149 ஆண்டுகளுக்குப் பிறகு குறு பூர்ணிமா தினத்தன்று இந்த சந்திர கிரகணம் ஏற்பட்டது அதிசய நிகழ்வாக மாறியுள்ளது. அதேவேளையில் அப்பலோ 11 விண்கலம் விண்ணில் ஏவப்பட்ட 50 ஆவது ஆண்டில் சந்திர கிரகணம் நிகழ்ந்தது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் அடுத்தாக 2020 இல் ஜனவரி 10ஆம் தேதி பகுதி சந்திர கிரகணம் நிகழும் என்றும், 2021 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழும் என்றும் அறிவியலாளர்களின் வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.