காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஜனவரி 15ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் 47 வது நாளாக டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கள் கோரிக்கையை முன் வைத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை.
வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர். கடும் குளிரை தாங்க முடியாமல் தற்போது வரை 50 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினர் விவசாயிகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
மத்திய அரசு நடத்திய எட்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் முடிவடைந்த நிலையில், அதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகரங்களில் தர்ணாவில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.