சென்னையை உலுக்கிய மழை வெள்ளம் சற்றே ஓய்ந்திருக்கும் நிலையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பெரும் சேதத்தை விளைவித்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உள்வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவுகிறது என்றார்.
மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும், அது மேலும் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து 15 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வலுப்பெற கூடும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டார்.
சென்னை மற்றும் புறநகரில் அடுத்த 2 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், சென்னையில் இயல்பை விட 491% கூடுதலாக மழை பெய்து இருப்பதாகவும், அவர் விளக்கமளித்தார். வருகின்ற 13ஆம் தேதி அன்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, திருச்சி, மதுரை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும் பிற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.