15-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுக்கல் குறித்து பேராசிரியர் மாணவர்களுக்கு விளக்கி கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குப்பாயூர் கிராம பகுதியில் பழங்கால வரலாறு தொடர்பாக 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு நேரடி கள ஆய்வு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விவசாயிகள் சங்க கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சி.மாணிக்கராஜ், கம்பளியம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் போன்றோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இந்த கிராமத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வில் வீரன் நடுகல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மூக்கரை பிள்ளையார் என்று அழைத்து வந்தனர். சுமார் 1 1/2 அடி அகலமும், 3 1/2 அடி உயரமும் உடைய அந்த நடுக்கல் கி.பி 15.ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என பேராசிரியர் தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் வாழ்ந்த ஒரு வில் வீரனின் மரணத்தின் நினைவாக அந்த நடுக்கல் வைக்கப்பட்டிருக்கலாம். இதில் நின்று கொண்டிருந்த வீரனின் முகம் தேய்ந்து உள்ள நிலையில், வலது பக்கமாக கூந்தலை அள்ளி கட்டி முடிக்கப்பட்டும், காதுகளில் குண்டலங்கள், கழுத்தில் அணிகலன்களை அணிவித்து அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்களுக்கு பேராசிரியர் விளக்கி கூறியுள்ளார்.