சீனாவின் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். தற்போது இந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவிவருகிறது. இந்த வைரஸ் தொற்றினால் சீனாவில் 2500க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளனர். மேலும் 77,658 பேருக்கு வைரஸ் பரவியதால் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனா மட்டுமின்றி மற்ற நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது.
இந்நிலையில் சீனாவில் வெளியேற முடியாமல் சிக்கி தவித்து வரும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டு வருவதற்கு சி-17 குளோபல் மாஸ்டர் என்ற மிகப்பெரிய இராணுவ விமானத்தை அந்நாட்டின் வூஹான் நகருக்கு அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த விமானத்தில் சீனாவுக்கு நட்பு ரீதியில் மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை கொண்டு செல்லவும் கடந்த 20ம் தேதி மத்திய அரசு முன்வந்தது.
ஆனால் இந்திய விமானம் அங்கு செல்வதற்கு சீனா அனுமதி மறுத்துவிட்டது. இந்தநிலையில் வூஹான் நகரில் இருக்கும் இந்தியர்கள் அனைவரையும் சொந்த நாட்டிற்கு அழைத்துசெல்ல நேற்று முன்தினம் சீன அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து சீனாவுக்கு மருந்துபொருட்களையெல்லாம் ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மிகப்பெரிய இராணுவ விமானமான சி-17 குளோபல் மாஸ்டர் விமானம் வூஹான் நகருக்கு இன்று செல்லும் என தகவல் வெளியானது.
இந்நிலையில் 15 டன் மருத்துவ பொருட்களுடன் இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் சீனாவின் வூகான் நகருக்கு இன்று புறப்பட்டது. நட்பு அடிப்படையில் சீனாவுக்கு உதவும் நோக்கில் மருத்துவ பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விமானத்தில் முக கவசம் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் இடம் பெற்று உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் வூஹானில் சிக்கியிருக்கும் 100-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வரும் 27ஆம் தேதி நாடு திரும்புவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.