மகராஷ்டிராவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் வேகம் எடுக்கும் நிலையில் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநிலத்தில் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அம்மாநிலத்தில் கொரோனாவுக்கு 55,411 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 309 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் 33,43,951 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதுடன், 57,638 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மஹாராஷ்டிராவில் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல் படுத்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே அனைத்து கட்சி தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து இன்று மீண்டும் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.