தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 15 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என முதல்வர் பழனிச்சாமி வாக்குறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ஒவ்வொரு கட்சியும் வெளியிட்டு வருகிறது.
அதுமட்டுமன்றி தொகுதி பங்கீடு பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தங்கள் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. மேலும் தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக ஒவ்வொரு கட்சியும் போட்டியிட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அதில் மக்களை கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் தேர்தல் பரப்புரை செய்த முதலமைச்சர் பழனிச்சாமி, வெற்றி நடை போடும் தமிழகம் என்ற வார்த்தையை கேட்டாலே, திமுக தலைவர் ஸ்டாலின் நடுங்குகிறார். அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளதால், ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். மேலும், பொதுமக்களுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பேன் என்று, 2006-ல் வாக்குறுதி அளித்த திமுக யாருக்கும் கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய முதலமைச்சர், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளும் சாதனை படைத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், திமுக ஆட்சியில் மின்தட்டுப்பாடு இருந்த காலம் போய், தற்போது தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது என கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சர்வதேச தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு வரும்போது, 10 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.