காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல்நிலையங்களில் செல்போன்கள் காணாமல் போனதாக பொதுமக்கள் புகார் அளித்திருந்தனர். இந்த வழக்கை சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரித்து காணாமல் போன செல்போன்களை மீட்டனர். மொத்தம் 111 செல்போன்கள் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 15 லட்சம் இருக்கும். இந்த செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோட்டார் காவல்நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் கலந்துகொண்டு உரிமையாளர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அதன்பிறகு போலீஸ் சூப்பிரண்டு ஹரிஹரன் பிரசாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், போலீஸ் சூப்பிரண்டு நேரடி மேற்பார்வையில் என்னும் சைபர் கிரைம் காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு செல்போன்களை மீட்டுள்ளனர்.
இதேப்போன்று குட்கா, புகையிலை, கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது மாதிரியான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் 7010363173 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இந்த தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களில் உண்மை இருக்கிறதா என்பதை காவல்துறையினர் ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கூறினார். இந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு இதுவரை 63 புகார்கள் வந்துள்ளதாகவும், அதில் 11 தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். அதன்பிறகு பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருக்கிறது. இவை சில மின் இணைப்பு கோளாறுகளால் செயல்படாமல் இருக்கிறது. எல்லைப் பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை அமைப்பதற்கான முயற்சிகள் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறினார்.