கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஒரகடத்தில் இருந்து லாரிகளுக்கு உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தை நோக்கி புறப்பட்டுள்ளது. இந்த லாரியை சித்திக் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் சென்னீர்குப்பம் அருகில் இருக்கும் பெட்ரோல் நிலையத்தில் டீசல் போடுவதற்காக கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்த போது திடீரென பெட்டியில் இருந்து புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்திக் பெட்ரோல் நிலையத்தில் இருந்து சிறிது தூரம் லாரியை ஓட்டி சென்று சாலையோரம் நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். சிறிதுநேரத்தில் கண்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கண்டெய்னர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள உதிரிபாகங்கள் எரிந்து நாசமாகிவிட்டது. லாரி ஓட்டுனர் சாதுர்யமாக செயல்பட்டு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் இருந்து வாகனத்தை வெளியேற்றியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.