கொரோனா வைரஸ் நமது மாநிலங்களில் பரவாமல் தடுக்க அண்டை மாநிலங்களுக்கு மக்கள் அடுத்த 15 நாட்களுக்கு செல்ல வேண்டாம் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இது தமிழகத்திலும் பரவாமல் தடுப்பதற்காக எல்லையோர மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி,
ஈரோடு மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அண்டை மாநிலங்களிலிருந்து கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக ஈரோடு மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு சிறப்பு மருத்துவர் குழு அங்கு 24 மணி நேரமும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைப்படி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து உள்ளே நுழைய இருப்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு தங்களை முழு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
இருமல் சளி, காய்ச்சல் உள்ளிட்டவை இருந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் அதிவிரைவாக பரவாமல் தடுப்பதற்காக அடுத்த 15 நாட்களுக்கு அண்டை மாநிலங்களுக்கு சென்று வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.