இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கச்சிமடத்தின் மீனவர்கள் 15 பேர் இரண்டு விசை படகுகளுடன் கடந்த ஐந்தாம் தேதி அன்று மீன்பிடிப்பதற்காக சென்றிருக்கிறார்கள். எல்லையை தாண்டி சென்றதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களை, கடந்த ஏழாம் தேதி அன்று மன்னாரில் இருக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி 17ஆம் தேதி வரை அவர்களை சிறையில் வைத்திருக்குமாறு உத்தரவு பிறப்பித்தார். அதன் பிறகு அவர்களை வவுனியா சிறையில் அடைத்தனர். இன்று அவர்களை மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.
அவர்களிடம் நீதிபதி, இனிமேல் பத்து வருடங்களுக்கு தங்கள் நாட்டின் எல்லைக்குள் வந்து விடக்கூடாது என்று நிபந்தனை விதித்தார். அதன் பிறகு மீனவர்கள் 15 பேரையும் விடுதலை செய்ய உத்தரவு பிறப்பித்தார். மேலும், மீனவர்கள் இந்த நிபந்தனையை மீறும் பட்சத்தில் இரண்டு வருடங்கள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். விடுவிக்கப்பட்ட 15 மீனவர்களும் இன்னும் இரண்டு நாட்களில் நாடு திரும்பி விடுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.