தமிழகத்தில் கடந்த சில மாதங்களில் 15 கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் புள்ளி விவரம் வெளியிட்டுள்ளது.
வீதிக்கொரு கட்சி உண்டு சாதிக்கொரு சங்கம் உண்டு என்ற பாடல் வரிகள் வேகமாக நிஜமாகி வருவதாகவே தெரிகிறது . இந்தியாவில் இதுவரை 2 ,293 அரசியல் கட்சிகள் இருப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது .பொதுவாக வெளிநாடுகளில் குறைந்தபட்சமாக இரண்டு அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு கட்சிகள் இருக்கும் . இதனால் மக்கள் குழப்பம் இன்றி வாக்களிப்பது வழக்கம்.
இந்நிலையில் இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு வருடமும் புது புது கட்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன . மக்களவைத் தேர்தல் தேதிகள் அறிவிப்பு வெளியாகியதற்கு ஒரு நாள் முன்னதாக மார்ச் 9ஆம் தேதி வரை இந்தியாவில் மொத்தம் 2,293 அரசியல் கட்சிகள் இருக்கிறது என தேர்தல் ஆணைய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.இவற்றில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் 7 , மாநிலக் கட்சிகள் 59 ஆகும்.
தமிழகத்தில் மட்டும் கடந்த சில மாதங்களில் 15 புதிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரத்திற்காக விண்ணப்பித்துள்ளனர் . தமிழ்நாடு இளைஞர் கட்சி , மக்கள் விடுதலை கட்சி , அகில இந்திய பசும்பொன் முன்னேற்ற கழகம் , அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா முன்னேற்ற கழகம் , ஊழல் எதிர்ப்பு இயக்கம் , தமிழ் தெலுங்கு கட்சி , மக்கள் மசோதா கட்சி , தமிழ் மாநில முற்போக்கு திராவிட கட்சி , அனைத்து இந்திய மக்கள் சக்தி கழகம் , சுதந்திரா கட்சி , அனைத்து இந்திய மக்கள் கட்சி , தேசிய உழவர் உழைப்பாளர் கட்சி , தேசிய உழவர் உழைப்பாளர் கழகம் , நியூ ஜெனரேஷன் கட்சி , மக்கள் முன்னேற்ற செயல் கட்சி ஆகிய கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கின்றன .
இந்திய அளவில் பார்க்கும்போது பிப்ரவரி மற்றும் மார்ச் 9ஆம் தேதி வரை 149 அரசியல் கட்சிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ளது . தேர்தலிலும் புதுப்புது கட்சிகள் உருவாவதால் அதற்கு ஏற்றவாறு தேர்தல் ஆணையமும் புதுப்புது சின்னங்களை பட்டியலில் தேர்வு செய்துது வருவதாக கூறப்படுகிறது .