ஈரோட்டில் நடந்த மாநில அளவிலான நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பரிசு வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல் பாளையம் பகுதியில் சோளீஸ் ஸ்போர்ட்ஸ் நீச்சல்குளத்தில் நேற்று முன்தினம் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கு மாவட்ட நீச்சல் கழக செயலாளர் எஸ் .ரமேஷ் தலைமை வகித்துள்ளார். சோளீஸ் ஸ்போர்ட்ஸ் நிர்வாக இயக்குனர் குமரவேல் முன்னிலை வகித்துள்ளார். திருமகன் ஈவேரா எம்.எல்.ஏ மற்றும் என்.சி.ஆர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எம்.சி ராபின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு போட்டியை துவங்கி வைத்துள்ளனர்.
நீச்சலில் நிறைய வகை நீச்சல் உள்ளது. அதில் சாதாரண நீச்சல், பின்புற நீச்சல், தவளை நீச்சல், வண்ணத்துப்பூச்சி நீச்சல் ஆகிய பிரிவுகளில் 25 மீட்டர், 50 மீட்டர், 100 மீட்டர் என்று தனி நபர் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, ஆறாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்புகளுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் பொது பிரிவுகளில் மொத்தம் 66 வகையான போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது,
இப்போட்டியில் ஈரோடு, நாமக்கல், திருச்சி, கோவை, கரூர், திண்டுக்கல், சேலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார்கள். இதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் மற்றும் பரிசுகளையும் வழங்கியுள்ளார். மாவட்ட நீச்சல் கழகத்தலைவர் சஞ்சீவ்குமார், அகர்வால், நீச்சல் பயிற்சியாளர் ராஜா, ரஞ்சித்குமார் மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.