வருமானமும் சந்தாதாரர்கள் எண்ணிக்கையும் குறைந்த காரணத்தால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 150 நபர்களை பணிநீக்கம் செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெட்ப்ளிக்ஸ் நிறுவனமானது தொடர்கள் மற்றும் திரைப்படங்களை வாங்கி, அல்லது தயாரித்து தன் தளத்தில் வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு உலகநாடுகள் முழுக்க கோடிக்கணக்கான பார்வையாளர்கள் மற்றும் சந்தாதாரர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் மூலமாக வெளியான ஒரு நகைச்சுவை தொடர், மூன்றாம் பாலினத்தவர்களை கேலி செய்யக் கூடிய விதத்தில் இருப்பதாகவும், அதனை ஒளிபரப்ப தடை செய்யுமாறு மேற்கத்திய நாடுகளில் போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் சிலரும் அந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த நிறுவனம், நாங்கள் கூறும் பணியை மட்டும் செய்யுங்கள். வேறு கருத்து கொண்டிருப்பவர்கள் பணியிலிருந்து வெளியேறுங்கள் என்று கடுமையாக எச்சரித்திருக்கிறது.
இந்நிலையில் ஓடிடி தளங்கள் அதிகம் வந்த காரணத்தால், கடந்த காலாண்டில் வருமானத்தையும், 2 லட்சம் சந்தாதாரர்களையும் நெட்பிளிக்ஸ் இழந்தது. எனவே நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் 150 பணியாளர்களை நீக்கியிருக்கிறது. மேலும், 20 லட்சம் சந்தாதாரர்கள் குறையலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.