திருத்தணியில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ (வயது 23) கடந்த வியாழக்கிழமை பள்ளிக்கரணை வழியாக ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவில் இருந்த பேனர் ஒன்று அவர் மீது விழுந்ததில் கீழே விழ, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் அனைத்தும் தங்களது தொண்டர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது எனஅறிவுறுத்தியது. இதனிடையே நடிகர் சூர்யா காப்பான் திரைப்பட விழாவில் பேசிய போது ரசிகர்கள் யாரும் கட் அவுட் பேனர் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தினார்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் வாகன ஓட்டிகள் 150 பேருக்கு இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நெல்லை சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் அர்ஜூன் சரவணன் கோரிக்கையை ஏற்ற நெல்லை சூர்யா ரசிகர்கள் காப்பான் திரைப்படம் வெளியாகும் போது கட் அவுட் பேனருக்கு பதில் 200ஹெல்மெட் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.