இந்து கோவில்கள் இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் காணப்படுகிறது. அதில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோயில் பாகிஸ்தான் கராச்சியில் உள்ள ஜோர்ஜர் பஜாரில் உள்ளது. இந்த கோவிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த கோவிலில் அமைந்துள்ள அனுமன் சிலை இயற்கையாக அமைந்த உலகின் முதல் சிலை என கூறப்படுகிறது. அதாவது மனிதர்கள் கைப்படாமல் இயற்கையாக அமைந்த சிலை என நம்பப்படுவதால் இந்துக்களின் முக்கியமான கோயிலாக இது கருதப்படுகிறது.
இந்தக் கோவில் சிந்து பாரம்பரிய கலாச்சார பாதுகாப்பு சட்டம் 1994-ன் கீழ் தேசிய பாரம்பரியமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு ராமர் வனவாசத்தின்போது வந்து சென்றதாக நம்பப்படுகிறது.அதன்பிறகு கோவிலில் இருக்கும் அனுமன் சிலை பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்டு கோவில் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கோவில் ஆரம்பத்தில் 2230 சதுர அடியில் இருந்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவில் புனரமைக்கப்பட்டது.
இந்த கோவிலில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றபோது கோவிலின் பல இடங்களிலிருந்து சாமி சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வெள்ளை மற்றும் நீல நிறத்திலான 8 அடி உயர சிலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சமுகி ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு எடுக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.