கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த கன மழையினால் சுமார் 1500 வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சியளித்தன.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்ட பகுதிகளில் அதிகளவில் கனமழை பெய்து வந்துள்ளது. இதனிடையே வெப்பச் சலனம் காரணமாக நேற்று காலை முதல் மாலை வரை கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வந்துள்ளது.
இதனால் கடலூர் லாரன்ஸ் சாலையில் உள்ள சுரங்கப்பாதையில் பெய்த கன மழையினால் மூன்று அடிக்குமேல் தண்ணீர் நிரம்பி காணப்பட்டது. இதனிடையே அதனைக் கடக்க முயன்ற ஆட்டோ ஒன்றும் அதனுள் பழுதாகி சிக்கிக்கொண்டது. இதையடுத்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சாலை தடுப்பணையை சுரங்கப் பாதையின் இருபுறமும் அமைத்து வாகனங்கள் உள்ளே போய் சிக்குவதை தவிர்த்தனர். மேலும் கடலூரில் வண்டிப்பாளையம் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியில் மிகவும் தாழ்வான பகுதி என்பதாலும்,
மழைநீர் வடிந்து செல்வதற்கான எந்தவித வசதியும் இல்லாததாலும் அதிக அளவில் மழை நீர் தேங்கி சுமார் ஆயிரக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கிய படி காட்சி அளித்தனர். இதனால் அங்கே வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு அங்கிருந்தவர்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து தங்களது உறவினர்கள் நண்பர்கள் வீட்டிற்கு சென்று தங்கி விட்டனர். மேலும் சிதம்பரம் பகுதியிலும் கன மழையினால் தாழ்வான பகுதிகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியபடி காட்சியளித்தன.