ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் மனைவியிடமிருந்து மர்ம நபர் 16 ஆயிரம் ரூபாய் பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபதி நகரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான பாலசுப்பிரமணியம் என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் வீரகேரளம் மத்திய கரும்பு ஆராய்ச்சி நிலையத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வசந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வசந்தி தனது கணவரின் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபரிடம் 1000 ரூபாய் பணம் எடுத்து தருமாறு கூறிய வசந்தி ரகசிய எண்ணையும் தெரிவித்துள்ளார்.
அதன்பின் வசந்தி கொடுத்த ஏ.டி.எம் கார்டில் இருந்து 1000 ரூபாய் எடுத்த அந்த நபர் வேறொரு ஏ.டி.எம் கார்டை திரும்ப கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து வசந்தியின் ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அந்த மர்ம நபர் 16 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார். இதற்கான குறுஞ்செய்தி பாலசுப்பிரமணியத்தின் செல்போன் எண்ணிற்கு சென்றுள்ளது. இதனால் வசந்தியை தொடர்பு கொண்ட பாலசுப்பிரமணியம் எதற்காக 16 ஆயிரம் ரூபாயை எடுத்தாய் என்று கேட்டதால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வசந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.