அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலம் நகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் 161 வீடுகள் மற்றும் கடைகள் போன்றவைகள் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின் படி தாசில்தார், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரத்துடன் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக சென்றனர். இந்நிலையில் முல்லா நகர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் ஏரிகளை முதற்கட்டமாக அகற்றுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி ஒரு வீட்டை அதிகாரிகள் இடிக்கும் போது திடீரென அப்பகுதி மக்கள் திரண்டு வந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தாசில்தார் ஓரிரு நாட்களில் உங்களுடைய உடைமைகளை வீட்டில் இருந்து எடுத்துக் கொண்டு ஆக்கிரமிப்புகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தினார். மேலும் வீட்டை காலி செய்த பிறகு ஆக்கிரமிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என கூறிவிட்டு அங்கிருந்து அதிகாரிகள் மற்றும் காவலர்கள் ஆக்கிரமிப்பு பணிகளை கைவிட்டு சென்றனர்.