சர்தார் மருத்துவமனையில் 161 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டெல்லியில் உள்ள உலக புகழ்வாய்ந்த மிகப்பெரிய கொரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையான சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்திலிருந்து நேற்று ஏராளமான கொரோனா நோயாளிகள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்த 161 பேரில் 39 பெண்களும் அடங்குவர். குணமடைந்தவர்களுக்கு இந்தோ-திபெத்தியன் எல்லை கூடுதல் காவல் இயக்குநர் அமிர்த் மோகன் குணமடைந்ததற்கான சான்றிதழ்களையும், ரோஜா பூவையும் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தார். உலகின் மிகப்பெரிய கோவிட் பராமரிப்பு மையம் மற்றும் மருத்துவமனையான சர்தார் படேல் மையம் சென்ற ஜூலை 5ஆம் தேதி முதல் இந்தோ-திபெத்தியன் எல்லைக் காவலர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த மையம் 10 ஆயிரத்திற்கும் மேலான நோயாளிகளை ஒரே இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கும் வசதி உடையது. தற்போது வரை, இந்த மையத்தில் மொத்தம் 1,515 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நேற்று 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து மொத்தம் 1,127 பேர் இந்த மையத்தில் சிகிச்சைப் பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தொடர்ந்து டெல்லியில் கொரோனாவின் நிலைமை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.