163 நபர்களுக்கு நிவாரண நிதியாக ஒரு கோடியே 34 லட்சம் ரூபாயை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வழங்கியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து நிலப்பட்டா குறைகள், இலவச வீட்டு மனை பட்டா, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சி நிர்வாகங்கள், ஊராட்சித் துறை, கூட்டுறவு கடன் உதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத் துறை சார்பாக குறைகள் என பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக மனுகள் மற்றும் பொது நலன் குறித்த மனுக்கள் என மொத்தமாக 393 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அந்த மனுக்கள் குறித்து துறை அலுவலர்களிடம் வழங்கி இவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியாக இருப்பின் நடவடிக்கை எடுக்கவும், பின் மனு நிராகரிப்புக்கான காரணங்களையும் மனுதாரர்களுக்கு வழங்கிட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மூலமாக 12 இருளர் இன மக்களுக்கு பழங்குடியினர் நல வாரியம் அட்டைகளையும் மற்றும் அரக்கோணம் கோட்டத்திற்குட்பட்ட 163 நபர்களுக்கு ஒரு கோடியே 34 லட்சம் ரூபாயை சாலை விபத்து நிவாரண நிதியாக மாவட்ட கலெக்டர் வழங்கியுள்ளார்.