திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வி.மேட்டுப்பட்டி பகுதியில் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாஸ், அவரது மாணவர் ரத்தினம் முரளிதர், வரலாற்று ஆர்வலர்கள் உமா மகேஸ்வரி, சந்திரசேகர் ஆகியோர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது நாராயண குளக்கரையில் கணவன் மனைவி நடுகல்லை கண்டெடுத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்டது 17-ஆம் நூற்றாண்டை சேர்ந்த கணவன் மனைவி நடுகல் ஆகும். இதில் இருக்கும் ஆண் சிற்பம் இருகரமும் மார்போடு இணைந்து கும்பிட்ட நிலையில் இருப்பதோடு, காதில் வளைகுண்டலம், இடுப்பில் இடைக்கச்சை ஆடை, தார்பாய்த்து அதில் இருந்து கெண்டைக்கால் வரை மூடிய நிலையில் இருக்கிறது.
இதனையடுத்து பெண் சிற்பத்தில் காதில் வளைகுண்டலம், மார்பில் ஆரம், இடது கரம் தொங்கிய படியும், வலது கரம் இடுப்பில் வைத்த படியும், டோலி முத்திரை ஆகிவை இடம்பெற்றுள்ளது. இந்த நடுக்கலில் இடம்பெற்றுள்ள ஆண் நாயக்கர் மன்னர் ஆட்சி காலத்தில் முக்கிய அதிகாரியாக இருந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.