மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த சுற்றுச்சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளர் போலீசாரால் கைது செய்யப்படார் .
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகில் உள்ள நடூர் பகுதியில், மழையால் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது. சுற்றுச்சுவர் விழுந்ததில், அதனை ஒட்டிய வீடுகள் இடிந்து 17 பேர் பலியாகினர் . இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச் சுவரை கட்டிய வீட்டின் உரிமையாளரை கைது செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர் .
சிதைவடைந்து விழும் நிலையில் இருந்த அந்தச் சுற்றுச்சுவரை அப்புறப்படுத்தக்கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இருப்பினும் அது நிறைவேற்றப்படாததாலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் 17 பேர் பலிக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டிய அதன் உரிமையாளரான சிவசுப்பிரமணியத்தை தனிப்படை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.