சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கடந்த வாரம் கோவை அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் 17 வயது பெண் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து உடுமலை காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறுமியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொடிங்கியம் பகுதியில் வசிக்கும் தினேஷ் குமார் என்பவர் ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தினேஷ்குமாரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.