உலகம் முழுவதும் குழந்தை திருமணம் ஒரு சமூகப் பிரச்சினையாக இருந்து வருகிறது. ஒருபுறம் குழந்தை திருமணத்தை ஒழிக்க நினைத்தாலும், மறுபுறம் குழந்தை திருமணம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா நகரை சேர்ந்த, 17 வயது சிறுமி தனது தாய் மற்றும் சகோதரர் மீது போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் 4-ஆவது முறையாக தமக்கு திருமணம் செய்து வைக்க அவர்கள் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் விசாரணையில், ஒரே வருடத்திற்குள் தனது மகளுக்கு வெவ்வேறு நபர்களுடன் 3 முறை திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது. எனினும் அந்த 17 வயது சிறுமி ஒவ்வொருமுறையும் அவர்களுடன் வாழ்வதற்கு விருப்பமில்லாமல் திருமணமான சில நாட்களுக்குள் வீடு திரும்பியுள்ளார்.
இதையடுத்து 4-ஆவது முறையாக அந்த சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அந்த சிறுமியின் சகோதரர் ஏற்பாடு செய்துள்ளார். அதன் பின்னர், சிறுமி உதவி எண் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் சிறுமியை மீட்ட காவல்துறையினர் அவரது தாய் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.