17 ஆண்டுகளாக காட்டுக்குள் காரோடு தனியாக வாழ்ந்து வரும் ஒரு மனிதனின் கதையை இதில் பார்க்க போகிறோம்.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், சல்லியா தாலுகா அரந்தோடு அருகே உள்ள அடலே மற்றும் நெக்கரே என்ற இரு கிராமங்களுக்கு இடையில் ஒரு அடர்ந்த வனப்பகுதி உள்ளது. அந்த பகுதியில் 56 வயதான சந்திரசேகர் என்பவர் 17 ஆண்டுகளாக தனது அம்பாசிடர் காரில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு நெக்ரல் கெம்ராஜே லோ என்ற பகுதியில் 1.5 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை வைத்து 2003 ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் 40 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் அந்த கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதன் காரணமாக அந்த இடத்தை கூட்டுறவு வங்கி ஏலத்தில் எடுத்தது. இதுவரை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. பின்னர் தனது அம்பாசிடர் காரில் தனது சகோதரியின் வீட்டிற்கு சென்று சில நாட்கள் வசித்து வந்தார். அங்கும் சிறிது பிரச்சினை ஏற்பட்ட காரணத்தினால் தனியாக வாழ முடிவு செய்து வனப்பகுதிக்குள் சென்று அம்பாசிடர் காரிலேயே வாழத் தொடங்கினார். அதிலிருந்து தற்போது 17 வருடங்களாக காட்டில் காரிலேயே வாழ்ந்து வருகிறார். காட்டில் தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் மரக்கட்டைகளை பயன்படுத்தி கூடை செய்து அத்தனை அருகில் உள்ள கிராமத்திற்குச் கொண்டு சென்று ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டு, அதற்கு பதிலாக அரிசி ,சர்க்கரை மற்றும் மளிகை பொருட்களை வாங்கி வருவார்.
பல ஆண்டுகளாக இந்த வாழ்க்கையை வாழ்ந்து வரும் இவருக்கு ஒரே ஒரு ஆசை தான் உள்ளது. அது என்ன என்றால் தனது நிலத்தை திரும்ப பெறுவது தான். தன்னுடைய நிலம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்துள்ளார். அவரின் உலகம் அவருடைய கார் தான். இன்னும் அந்த கார் நல்ல நிலையிலேயே உள்ளது. அருகில் உள்ள இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அந்த காரை பயன்படுத்துவார். அவருக்கு ஆதார் அட்டை இல்லை. ஆனால் கிராம பஞ்சாயத்து அவருக்கு கோவிட்-19 தடுப்பூசி கொடுத்துள்ளது. ஊரடங்கு காலத்தில் தண்ணீர் மற்றும் காட்டில் கிடைக்கும் பழங்களை உண்டு உயிர் வாழ்ந்து வந்தார். 17 வருடங்களாக காற்றிலே வாழ்ந்த இவர் தனது நிலத்தை மீண்டும் பெற்று அம்பாசிடர் காரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கனவில் தற்போது வரை வாழ்ந்து வருகிறார்.