17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கார் ஓட்டுநர் மற்றும் கடலூரை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது மாணவி அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா ஊரடங்கின் காரணமாக ஆன்லைன் மூலம் அவர் பாடங்களை படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று அந்த மாணவி மாயமானதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அப்பகுதியில் மாணவியை தேடியுள்ளனர்.ஆனால் ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்தனர்.
அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகம் மற்றும் கடலூரை சேர்ந்த ஏழுமலை ஆகியோர் சிறுமியின் செல்போனுக்கு அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதை தொடர்ந்து காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வேளாங்கண்ணிக்கு சென்று மாணவியை மீட்டனர். அங்கு மாணவியிடம் விசாரித்தபோது சண்முகமும் ஏழுமலையும் தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்ததாக அவர் காவல்துறையினரிடம் கூறினார்.
படிப்பதற்காக பெற்றோர் வாங்கிக் கொடுத்த செல்போனை பயன்படுத்தி மாணவி முகநூல் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பல புதிய நண்பர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால் முகநூல் மூலம் கடலூரை சேர்ந்த ஏழுமலை என்பவருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி தன்னை சந்திக்க வருமாறு அழைத்துள்ளார். அவரை எப்படி சந்திக்கச் செல்வது என்று நினைத்தபோது கார் ஓட்டுனர் சண்முகம் அறிமுகமாகியுள்ளார் . பின்னர் அந்த மாணவியிடம் சண்முகம் கடலூருக்கு அழைத்துச் செல்வதாக கூறி உள்ளார். அதை நம்பி மாணவி அவருடன் சென்றுள்ளார். அப்போது அவர் ஊட்டிக்கு அழைத்து சென்று மாணவியை மூன்று நாட்கள் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அவர் அந்த மாணவியை காரில் அழைத்துச்சென்று திருச்சியில் விட்டுள்ளார். அங்கு மாணவியை சந்தித்த ஏழுமலையும் மூன்று நாட்கள் அவரை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் உடல் மற்றும் மனரீதியாக மாணவி பாதிப்புக்குள்ளாகி இருந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கார் ஓட்டுநர் சண்முகம் மற்றும் ஏழுமலை ஆகிய 2 பேர் மீதும் கோவை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.