உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவர் கற்பழித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்கிம் கெரி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, சென்ற வெள்ளிக்கிழமை பிற்பகல் வயலுக்குச் சென்றுள்ளார். நெடு நேரமாகியும் அவள் வீடு திரும்பவே இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவளது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி அலைந்தனர். அப்போது அங்குள்ள கரும்பு தோட்டத்தில் சிறுமி இறந்து கிடந்தாள். அவளை இருவர் கற்பழித்து, கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தொண்டை மற்றும் கண்ணில் காயம் இருந்ததாக உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால், அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதியாகி விட்டதாகவும், அவளது தொண்டை, கண்களில் காயம் எதுவும் இல்லை என்றும் போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து, பா.ஜ.க. அரசின் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு சிறுமியின் கொலை சான்றாக உள்ளது என காங்கிரஸ், சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.