17 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாமல் இருந்த பள்ளிக்கு தேர்தல் வருவதால் மின்சாரம் வந்துள்ளது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியின் எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ளது பெரியநாயக்கம்பாளையம் . இந்த பகுதியில் ஒரு அரசு நடுநிலை பள்ளி ஒன்று கடந்த 17 ஆண்டுகளாக செயல்பட்டுக்கொண்டு வருகின்றது . பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தடாகம் என்ற வனப்பகுதியில் அமைந்துள்ள இந்த பள்ளியில் அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ மாணவிகள் என சுமார் 47 பேர் படிக்கின்றனர். 17 ஆண்டுகளாக செயல் படும் இந்த பள்ளியில் மின் இணைப்பு வசதி கிடையாது . பள்ளியில் மின்சாரம் வசதி செய்திட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது.மேலும் அந்த பள்ளியும் வாக்குச்சாவடி மையமாக செயல்படுவதால் வாக்களிக்க வசதியாக பள்ளிக்கு மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் தேர்தலில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் மின் இணைப்பு வசதி செய்யப்பட்டது. 17 ஆண்டுகளாக இல்லாத மின்சார வசதி தேர்தலால் வந்துள்ளது என மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.