தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில் அந்த மாணவிக்கு 17 வயது என்பதும், அவர் 12 ஆம் வகுப்பு படித்து வருவதும் தெரியவந்துள்ளது. இவர் தனது உறவினர் வீட்டிற்கு கடந்த ஆண்டு சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் வல்லரசு என்பவர் மாணவிக்கு ஆசை வார்த்தைகளை கூறி அவரிடம் நெருங்கி பழகியுள்ளார். இதில் மாணவி கர்ப்பம் அடைந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து குழந்தைகள் நலக்குழு தேனி மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது, அவர் நடந்ததை கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினரிடம் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வல்லரசுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.