கொரோனா வைரஸ் உலகளவில் 157 நாடுகளில் பராவியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் சீனாவுக்கு பிறகு இத்தாலியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் ஒரே நாளில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் 368 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அந்த நாளில் கொரோனா பலியானோர் எண்ணிக்கை 2000த்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டு 2335 பேர் குணமடைந்துள்ளனர்.
அதேநேரம் புதிதாக 2,900 பேருக்கு கொரோனா உறுதியாக இருக்கிறது. இதுவரை 20 ஆயிரத்து 600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,500க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் கண்காணிப்பில் வைக்கப்பட்ட 368 பேர் உயிரிழந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துவிட்டதன் அச்சம் காரணமாக கிறிஸ்மஸ் கொண்டாட்ட காலத்தை காட்டிலும் அதிக அளவில் மக்கள் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். மக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும் போது , மக்கள் பொருட்களை வாங்கிக் குவிக்க வேண்டிய அவசியமில்லை , பொறுமையாக இருங்கள். கிஸ்மஸ் காலத்தை காட்டிலும் அதிக பொருட்களை மக்கள் வாங்குவதாக வால்மார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தேவையற்ற அச்சம். முழுவீச்சுடன் செயல்படுகிறோம் , இதுவும் கடந்து போகும் , தைரியமாக இருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் , ஸ்பெயின், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில்கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. சீனா கொரோனா தாக்கத்தை குறைத்து கொண்டிருக்கும் நிலையில் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பல நாடுகள் தமது எல்லைகளை மூடி , குடிமக்களை வீட்டுக்குள் முடக்கி உள்ளனர். இருப்பினும் கூட கொரோனவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா 157 நாடுகளில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை தாக்கி இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.