நீட் தேர்வை விலக்க முடியாமல் தடுத்தது திமுக கூட்டணி தான் என முதலமைச்சர் சட்டசபையில் ஆவேசமாக கூறியுள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தில் இன்று திமுக தலைவரான மு.க. ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது இது பற்றி பேசிய அதிமுக எம்எல்ஏ இன்பதுரை, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியில் 2010ம் ஆண்டுதான் நீட் தேர்வு என்பது கொண்டு வரப்பட்டதாகவும், இதை திமுக முழுமையாக ஆதரிக்க தான் செய்தது என்றும் கூறினார். அப்போது எதிர்க் கருத்தாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருணாநிதி முதலமைச்சராக இருந்த காலகட்டங்களில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை என்றார்.
மேலும் பேசிய இன்பதுரை, நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு உச்சநீதிமன்றம் விலக்கு அளிக்க இருந்த நேரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் தான், நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடி அதனை கெடுத்து விட்டதாக கூறினார். இவ்வாறு அவர் கூறிய கருத்தை கேட்டு சர்ச்சை ஏற்பட்டு அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடினாரா ? இல்லையா? என ஸ்டாலினை நோக்கி கேள்வி கேட்டார்.
நளினி சிதம்பரம் பற்றிய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி முழக்கமிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வை கொண்டு வந்து 13 பேரின் மரணத்திற்கு காரணமானது திமுக கூட்டணி தான் என்றும் நீட் தேர்வை கொண்டு வந்தது யார் என்று நாட்டுக்கே தெரியும் என்றும் அவர் ஆவேசமாக கூறினார். அதன் பின் வெளியே வந்த எம்எல்ஏக்கள், செய்தியாளர்களிடம் பேசிய போது,” சட்டப்பேரவையில் இல்லாத நளினி சிதம்பரம் குறித்து பேசினார்கள். நாங்கள் எதிர்த்து கேட்டோம்., அதனால் எங்களை வெளியேற்றி விட்டார்கள்” என்று குற்றம்சாட்டினார்.