18 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டார்கள்.
கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து சென்ற 2-ம் தேதி முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதன்பின் காலை 9 மணியளவில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இதை அடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கலைந்து செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலக சாலையில் மறியலில் ஈடுபட்டார்கள். இதன் இடையே உதவி கமிஷனர், துணை கமிஷனர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அனைவரையும் வேனில் ஏற்றி சென்றார்கள்.
இதில் 250க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டார்கள். இரண்டாவது நாளாக நேற்று முன்தினமும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கோவையில் 2000 டன் குப்பைகள் தேங்கியது. கோவையில் சராசரியாக ஒரு நாளைக்கு 1200 டன் குப்பைகள் சேரும், அந்த வகையில் 2 நாட்களாக குப்பைகள் அள்ளப்படாததால் 2000 டன் குப்பைகள் தேங்கியது.
மேலும் பொதுமக்கள் குப்பைகளை தொட்டிகள் மற்றும் சாலையோரத்தில் வீசி சென்றார்கள். இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியுள்ளதாவது, 40 சதவீத தூய்மை பணியாளர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றும் பணியானது நடந்து வருகின்றது. செவ்வாய்க்கிழமை நிரந்தர பணியாளர்கள் மற்றும் பணிக்கு வரும் ஒப்பந்த பணியாளர்களை கொண்டு நகரம் முழுவதும் தூய்மை பணியை நடத்தப்படுகின்றது. விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டு முடிவுக்கு வரும் என கூறியுள்ளார்கள்.