மூச்சுத்திணறல் மற்றும் இருமல் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலிலிருந்து பேனா மூடி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ். பல ஆண்டுகளாக மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றபோது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது ஒரு சிறிய பொருள் இருப்பதை பார்த்த டாக்டர் அதனை ஆபரேஷன் செய்து அகற்ற முடிவு செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது வாலிபரின் நுரையீரலில் பேனா மூடி இருந்ததை கண்டுபிடித்தனர். அந்தப் பேனா மூடியை டாக்டர்கள் ஆபரேஷன் செய்து அகற்றினர். தற்போது அவர் உடல் குணமடைந்து தேறி வருகிறார். இது குறித்து சூரஜ் கூறும்போது: தான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது அடிக்கடி பேனா மூடியை வைத்து விசில் அடிப்பேன். அப்படி ஒருமுறை விசில் அடித்த போது பேனா மூடியை விழுங்கி விட்டேன். இதையடுத்து எனது பெற்றோர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்கள் பரிசோதனை செய்துவிட்டு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி அனுப்பி விட்டனர். சில தினங்களுக்குப் பிறகு எனக்கு மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்பட்டது. தற்போது 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்தப் பேனா மூடி அகற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.