சிவகங்கை அருகே வாடி நன்னியூர் பகுதியில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் அருகே 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் நீர் சேமிப்பை வலியுறுத்தும் வகையில், கூலி இல்லாமல் நீர்நிலைகளை பராமரிப்பது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலைகளை கூலி இல்லாமல் தலைமுறை தலைமுறையாக பராமரித்து காக்க வேண்டும் என்று அந்த கல்வெட்டில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வாடி நன்னியூர் பகுதி அருகே கல்வெட்டு ஒன்று இருப்பதாக வாடி நன்னியூர் ரத்தினம், திருவாடானை நாகணி ஆசிரியர் அர்ஜுனன் ஆகியோர் தொல்லியல் ஆய்வு நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவரான வே.ராஜகுரு அந்த கல்வெட்டை ஆய்வு செய்துள்ளார். அதை பார்த்துவிட்டு அவர் வாடி நன்னியூர் பகுதியில் உள்ள கண்மாய் அருகில் ஒரு அடி அகலமும், 2 அடி உயரமும் கருங்கல்லில் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டை அறிவாளை தீட்டுவதற்கு பயன்படுத்தியுள்ளதால் மன்னர்களின் பெயர் அழிந்து விட்டதாக அவர் கூறியுள்ளார். இதனால் அந்த கல்வெட்டில் 13 வரிகள் மட்டுமே உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அந்த கல்வெட்டில் ஆளமஞ்சி, பிறவரி ஆகியவை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து நடைபெற வேண்டும். அதற்க்கு யாராவது தீங்கு செய்ய நேர்ந்தால் அவர்கள் சேது மற்றும் கங்கை காராம்பசுவையும், பெற்றோரையும் கொநிற தோஷத்தில் போவதாக அந்த கல்வெட்டு செய்தி கூறுகிறது. மேலும் கூலி இல்லாமல் நீர்நிலைகளை பராமரிப்பு செய்யும் கட்டாய வேலை , ஆளமஞ்சி என அழைக்கப்படுகிறது. சந்திரன், சூரியன் உள்ளவரை இந்த இரண்டும் நடைபெற வேண்டும் என சந்திரபிரவேசமாக அதில் கட்டளையிடப்பட்டுள்ளது. சந்திர பிரவேசம் என்பது தலைமுறை தலைமுறையாக என்னும் பொருளில் அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ஊர் கல்வெட்டில் நன்னியூர் வாடி என குறிப்பிடப்பட்டுள்ளது. வாடி நன்னியூர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது ஆகும்.