தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தின் போது அதிமுக கட்சியை சேர்ந்த கொறடா மந்திரமூர்த்தி பேசினார். அவர் மின் கட்டண உயர்வு மற்றும் சொத்து வரி உயர்வு போன்றவற்றை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறினார். அதன்பின் 5 அதிமுக வெளிநடப்பு செய்து விட்டு கவுன்சிலர்கள் கிளம்பி சென்றனர். இருப்பினும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் கூட்டத்தின் போது ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தற்காலிக பணியாளர்களை நியமித்தல், அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்தல், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அனுமதியற்ற முறையில் கட்டப்பட்டுள்ள கட்டடிங்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன் பிறகு மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். அவர் பேசியதாவது, அனுமதியில்லாத கட்டிடங்களினால் மாநகராட்சிக்கு வருமானம் பாதிக்கப்படுகிறது. இதனால் அனுமதியின்றி இயங்கும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 80 சதவீதம் நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதன்பிறகு உதவி ஆணையாளரிடம் கவுன்சிலர்கள் தங்களுடைய பிரச்சனையை தெரிவிக்கலாம். அவர்களிடம் கூறியும் பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்றால் உடனே என்னை அணுகலாம்.
குடிநீர் பிரச்சனையில் மட்டும் எப்போதும் மெத்தனமாக இருக்கக் கூடாது. ஒவ்வொரு வார்டையும் நாம் தரம்மிக்க வார்டாக மாற்ற வேண்டும். அனைத்து பகுதிகளிலும் 2,500 மின்விளக்குகள் பொருத்தப்பட இருக்கிறது. வருகிற டிசம்பர் மாதத்திற்குள் ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிக்கப்படும். மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளிலும் தலா ஒரு பூங்கா அமைக்கப்படும். இதுவரை 25 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர், துணை மேயர், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.