இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளில் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதில் முதல்கட்டமாக முன் களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் திட்டத்தை புதுச்சேரி ESI மருத்துவமனையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார். அதன்பிறகு தகுதியான அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் தான் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட முடியும் என்று அவர் கூறினார்.