குஜராத் மாநிலத்தில் உள்ள சல்தான் பகுதியில் ரியா (வயது 18) என்ற கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவர் தனது தேர்வுக்காக இரவில் தூங்காமல் படித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் பின்புறம் நள்ளிரவு 1.30 மணியளவில் ஏதோ ஒரு சத்தம் கேட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த சத்தம் குறித்து ரியா பெரிய அளவில் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் மர்மநபர் ஒருவர் கையில் கத்தியுடன் ரியாவின் முன்வந்து நின்றுள்ளார்.
மேலும் படுக்கையின் மீது ஏறி வந்த அந்த நபர் திடீரென ரியாவின் கழுத்தில் கத்தியை வைத்துள்ளார். அதன் பிறகு அந்த அறைக்குள் மேலும் இரண்டு பேர் நுழைந்துள்ளனர். அவர்களில் ஒருவன் திடீரென தூக்கத்திலிருந்து ரியாவின் இளைய சகோதரியை தாக்க முயற்சி செய்துள்ளார். இவர்கள் கொள்ளைக்கார கும்பல் என்பதை அறிந்த ரியா தனது கழுத்தில் கத்தியை வைத்திருந்த நபர் கவனக்குறைவாக இருந்த சமயத்தில் கத்தியை தள்ளி விட்டுள்ளார்.
இதனால் ரியாவின் இடது கையில் பெரிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரியா கூச்சலிட்டு உதவியை நாடியுள்ளார். அதன்பிறகு ரியாவின் தாயார் சத்தம் கேட்டு ஓடி வந்துள்ளார். இந்த நிலையில் அந்த கும்பல் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டது. அந்த திருடர்கள் இந்த சம்பவத்தின் போது மொபைல் போன் ஒன்றை திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.