முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று தமிழகத்தின் நகர மற்றும் ஊரக உள்ளாட்சி பகுதிகளில் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்துகொண்டு தலைமை தாங்கினார். அதேபோல் சென்னை மாநகராட்சி கமிஷனர், நகராட்சி அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் பேசியதாவது, சென்னையில் கடந்த ஜூன் மாதத்தில் 22.7 சதவிகிதம் கொரோனா பாதிப்பு பதிவாகி இருந்ததாகவும், தற்போது தமிழக முதலமைச்சரின் தொடர் நடவடிக்கையால் பாதிப்பு 18.2 சதவிகிதமாக குறைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதேபோல் நாள்தோறும் சென்னையில் வீடு வீடாகச் சென்று களப்பணியாளர்கள் சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறி கொண்டவர்களை கண்டறிந்து கணக்கு எடுத்து வருவதாகவும், வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதன்படி கடந்த 7ஆம் தேதி மட்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 139 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 1,203 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசின் அறிவுரைகளை இன்னும் மக்கள் கடுமையாக பின்பற்றி ஒத்துழைப்பு அளித்தால் மிக விரைவில் கொரோனாவை கட்டுப்படுத்தி விடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.