கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாள் சம்பளம் ரூ. 721 வழங்கப்படுகிறது. இது சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்துள்ளார். அதன் பிறகு தூய்மை பணியாளர்கள் ஒரு நாள் சம்பளத்தொகையை உயர்த்த வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் உட்பட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி நேற்று முன்தினம் மாநகரில் உள்ள 3500 தூய்மை பணியாளர்கள் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 10,000 தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற தூய்மை பணியாளர்கள் காந்தி சிலை இருக்கும் இடத்திற்கு ஊர்வலமாக சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர். மேலும் தூய்மை பணியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தங்களுடைய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுக்கப் போவதாக கூறியுள்ளனர். ஆனால் யாருமே பணிக்கு செல்லாததால் மாநகரில் தூய்மை பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.