சரியாக பேட்டிங் செய்யாததே தோல்விக்கு காரணம் என ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டாக்காவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 41.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளும் இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக கே.எல் ராகுல் 5 பவுண்டரி, 4 சிக்ஸர் உட்பட 73(70) ரன்கள் குவித்தார். வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன் 5 விக்கெட்டுகளும், எபடோட் ஹொசைன் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.. இதையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 46 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வங்கதேச அணி பேட்டிங் செய்யும்போது 39.3 ஓவரில் 136 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது. எனவே இந்திய அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நினைத்த நேரத்தில் கடைசி விக்கெட்டுக்கு முஸ்தபிசுர் ரஹ்மான் மற்றும் மெஹிதி ஹசன் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்ததால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு கையை விட்டு நழுவி சென்று கொண்டிருந்தது.
அப்போது 43 வது ஓவரை ஷர்துல் தாகூர் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஹசன் தூக்கி அடிக்க மேலே சென்ற பந்து நேராக பின்னால் கீப்பருக்கு சென்றது. அதனை கே எல் ராகுல் வேகமாக ஓடி பிடிக்க சென்றார். ஆனால் அவர் கையில் பட்டு பந்து கீழே விழுந்தது. இதனால் ஆட்டம் மாறியது. அதன்பின் எந்தவித வாய்ப்பும் கொடுக்காமல் அவர்கள் இருவரும் வங்கதேச அணியை வெற்றி பெறச் செய்தனர்.. இந்த ஜோடி கடைசி விக்கெட்டுக்கு மட்டும் 51 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை பறித்தது. இந்திய அணி தோல்விக்கு கே.எல் ராகுல் கேட்சை தவறவிட்டதே காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் டாப் ஆர்டர் சொதப்பிய நிலையில், சில ரசிகர்கள் ராகுல் 73 ரன்கள் அடிக்கவில்லை என்றால் இந்திய அணி 186 ரன்கள் கூட அடித்திருக்காது எனவும் அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் போட்டிக்குப்பின் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், இது (186) போதுமான ரன்கள் இல்லை. இன்னும் 30-40 ரன்கள் எடுத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.. துரதிர்ஷ்டவசமாக, நாங்கள் நடுவில் விக்கெட்டுகளை இழந்தோம். இது மிகவும் நெருக்கமான ஆட்டம். நாங்கள் நன்றாக விளையாடி மீண்டும் ஆட்டத்திற்கு வந்தோம். நாங்கள் நன்றாக பேட் செய்யவில்லை. நாங்கள் நன்றாக பந்துவீசி அவர்களை இறுதிவரை அழுத்தத்தில் வைத்திருந்தோம்.”நாங்கள் எப்படி பந்து வீசினோம் என்பதை நீங்கள் திரும்பிப் பார்த்தால், நிச்சயமாக கடைசி சில ஓவர்களில் நாங்கள் விக்கெட்டைப் பெற விரும்பினோம், நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தினோம்.
பிட்ச் சற்று சவாலாக இருந்தது. எப்படி விளையாடுவது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற நிலைமைகளுக்கு (ஆடுகளங்களில் விளையாடி) நாங்கள் பழக்கப்பட்டவர்கள் என்பதால் சாக்குபோக்கு எதுவும் சொல்ல முடியாது, இது அழுத்தத்தைக் கையாள்வது பற்றியது. அடுத்த ஆட்டத்தை நாங்கள் எதிர்நோக்குகிறோம். நாம் சுற்றியுள்ள விஷயங்களை மாற்ற முடியும் என்று நம்புகிறோம். இந்த நிலைமைகளில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும், ”என்று அவர் கூறினார்.