Categories
தேசிய செய்திகள்

இமாச்சலப் பிரதேசத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 187 பயணிகள் மீட்பு!

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில், அங்கு சிக்கித் தவித்த 187 பேரை நேற்று அதிகாலை காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.

இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் குஃப்ரி அருகே பலத்த பனிப்பொழிவு ஏற்பட்ட நிலையில் சிக்கித் தவித்த 187 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து சிம்லா காவல் கண்காணிப்பாளர் ஓமபதி ஜம்வால் கூறுகையில், “பனிப்பொழிவு காரணமாக குஃப்ரி-செயில் சாலையில் சிக்கித் தவித்த 187 பேர் சிம்லா மாவட்ட காவல் துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பனிப்பொழிவு காரணமாக சாலைகள் பனிக்கட்டி மற்றும் வழுக்கும் நிலையில் காணப்பட்டன. மேலும் என்.ஹெச். 5 தேசிய நெடுஞ்சாலையில் சிக்கித் தவித்த பேருந்துகள், லாரிகள் மற்றும் கார்கள் என 31 வாகனங்கள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன” என்று கூறினார்.

இதுமட்டுமின்றி சிம்லா சாலைகளில், “சுற்றுலா வாகனங்கள், உள்ளூர் தனியார் வாகனம், எச்.ஆர்.டி.சி. மாநில பேருந்துகள், தனியார் பேருந்துகள், போக்குவரத்து வாகனம், டாக்ஸி, கார், பிக்கப் டிரக் பல வாகனங்கள் சிக்கித் தவித்தன.

இதனை அகற்றும் பணிகளிலும் காவலர்கள் ஈடுபட்டனர். இந்த பணிகள் இன்று அதிகாலை 4 மணிக்கு முடிவடைந்தன. ஆகவே இமாச்சலப் பிரதேச சாலைகளில் வாகனங்கள் பயணிக்கும்போது வாகன ஓட்டிகள் கவனத்துடன் வாகனத்தை இயக்க வேண்டும்” என்றும் ஓமபதி ஜம்வால் கேட்டுக்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்கனவே பனிப்பொழிவு உள்ளது. இதற்கிடையில் இந்த வாரமும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், லேசான பனிப்பொழிவு இருக்க வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆராய்ச்சி மைய தகவல்கள் முன்னறிவிக்கின்றன.

Categories

Tech |